இந்தியா

வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்

கேரளா முழுவதும் இன்று காங்கிரசார் மறியல்-போராட்டம்

Update: 2022-06-25 08:17 GMT
  • ராகுல் காந்தி அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கூறி காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர்.
  • ராகுல் காந்தி அலுவலகம் முன்பிருந்து மாவட்ட காங்கிரசார் கண்டன பேரணி நடத்துகிறார்கள்.

திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் உள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களை பாதுகாக்க வனபகுதியை சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் பகுதியை பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மண்டலமாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

இதற்கு கேரளாவின் மலையோர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த உத்தரவை வாபஸ் பெறக்கோரி வயநாடு பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் களம் இறங்கினர். கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. அமைப்பினரும் நேற்று போராட்டத்தில் குதித்தனர். கல்பேட்டா பகுதியில் பேரணி நடத்திய அவர்கள் இந்த பிரச்சினையில் தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கல்பேட்டாவில் உள்ள அவரது அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்கள் ராகுல்காந்தியின் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதற்கிடையே ராகுல்காந்தி அலுவலகம் தாக்கப்பட்ட தகவல் அறிந்த காங்கிரசார் அங்கு திரண்டனர். அவர்கள் எஸ்.எப்.ஐ. அமைப்பினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ராகுல் காந்தி அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வயநாடு பகுதி எஸ்.எப்.ஐ. நிர்வாகிகள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே எஸ்.எப்.ஐ. அமைப்பினர் ராகுல் காந்தி அலுவலகத்தை சூறையாடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. அலுவலகம் தாக்கப்பட்தற்கு காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால், சசிதரூர் எம்.பி. ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் கேரளா முழுவதும் இன்று காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம், பாலக்காடு, கோழிக்கோடு உள்பட பல மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்தும், ராகுல் காந்தியின் அலுவலகத்தை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

இதுபோல இன்று மதியம் 2 மணிக்கு கல்பேட்டாவில் உள்ள ராகுல் காந்தி அலுவலகம் முன்பிருந்து மாவட்ட காங்கிரசார் கண்டன பேரணி நடத்துகிறார்கள். இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

கல்பேட்டாவில் ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயனும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதோடு, இது தொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே கல்பேட்டாவில் ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதை தடுக்க தவறியதாக கல்பேட்டா போலீஸ் டி.எஸ்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

Similar News