இந்தியா

நிலக்கரி ஊழல்: மேலும் ஒரு வழக்கில் முன்னாள் செயலாளர் குப்தா குற்றவாளியாக அறிவிப்பு

Published On 2022-07-29 12:39 GMT   |   Update On 2022-07-29 12:39 GMT
  • நிலக்கரி ஊழல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் 11வது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
  • குற்றவாளிகளுக்கான தண்டனை தொடர்பான வாதம் ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறுகிறது.

புதுடெல்லி:

நிலக்கரி ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி. குப்தா, முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.குரோபா, கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், அதன் இயக்குனர் முகேஷ் குப்தா ஆகியோர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர்களுக்கான தண்டனை தொடர்பான வாதம் ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறுகிறது. வாதத்திற்கு பிறகு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள லொகாரா கிழக்கு நிலக்கரி சுரங்கத்தை கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நிலக்கரி ஊழல் வழக்குகளில், 11வது தீர்ப்பாகும். குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம். நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும்.

நிலக்கரித்துறை முன்னாள் செயலாளரான எச்.சி.குப்தா இதற்கு முன்னர் 3 நிலக்கரி ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தண்டனைகளுக்கு எதிரான அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News