இந்தியா

கைப்பையில் மர்ம பொருள், தனி இணையம்: ஜி20 சீன குழுவின் வித்தியாசமான நடத்தை

Published On 2023-09-13 06:55 GMT   |   Update On 2023-09-13 06:55 GMT
  • சீன குழுவினர் தாஜ் பேலஸ் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்
  • ஸ்கேனர் கருவி ஆய்வுக்கு அவர்கள் உடன்படவில்லை

இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த வாரம் 9, 10 தேதிகளில் நடைபெற்றது.

ஜி20 உறுப்பினர்களாக இருந்த போதிலும் சீனா மற்றும் ரஷியாவின் அதிபர்கள் கலந்து கொள்ளவில்லை. சீனாவின் சார்பில் அந்நாட்டு உயரதிகாரி லி கியாங் தலைமையில் ஒரு குழு கலந்து கொண்டது.

வருகை தந்த அனைத்து உலக நாட்டு முக்கிய தலைவர்களுக்கும், பிரதிநிதி குழுவிற்கும் இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பும், உபசரிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர் அனைவரும் புதுடெல்லியில் உள்ள உயர்ந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

உச்சி மாநாடு வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைந்தது.

இந்நிலையில் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்ட சீன பிரதிநிதி குழு குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கடந்த வியாழக்கிழமையன்று டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் சீன குழு தங்க வைக்கப்பட்டது. அப்போது வழக்கமான பாதுகாப்பு பரிசோதனையின்போது வழக்கத்திற்கு மாறான அளவுகளில் பெட்டிகளை கொண்டு வந்திருந்தனர் என்பது தெரிந்தது. இருப்பினும் ராஜாங்க நடைமுறைப்படி அவற்றை பாதுகாவலர்கள் அனுமதித்தனர்.

பிறகு, அந்த குழு தங்கியிருந்த ஒரு அறையில், மர்மமான ஒரு சாதனம் அவர்களின் 2 பைகளில் உள்ளதை ஓட்டல் பணியாளர் ஒருவர் கண்டுபிடித்தார். அவர் இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவர்கள் ஓட்டல் மேலதிகாரிகளுக்கு இதனை தெரிவித்தனர்.

இதையடுத்து ஓட்டல் அதிகாரிகள், அந்த குழுவினரிடம் அவர்களது பைகளை "ஸ்கேனர்" கருவி ஆய்வுக்கு தருமாறு கோரிக்கை வைத்தனர். அந்த பைகளை வழக்கமான தூதரக பணிக்கான பைகள் என கூறி சீன குழுவினர் தர மறுத்தனர்.

சுமார் 12 மணி நேரம் அவர்களின் அறைக்கு வெளியே பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். இருப்பினும் ஒட்டல் மற்றும் சீன தரப்புக்குமிடையே இப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே சென்றது.

இறுதியாக அந்த பைகளை அவர்களின் தூதரகத்திற்கே அனுப்ப சீன குழு சம்மதித்தது. அவற்றில் இருந்த சாதனங்கள் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இதைத்தவிர, அந்த சீன குழுவினர் ஓட்டல் அறையில் இருக்கும் இணையத்தை பயன்படுத்த மறுத்து, தனியாக தங்களுக்கென இணைய வசதி கோரினர். ஆனால், ஓட்டல் நிர்வாகம் இதற்கு மறுத்து விட்டது.

சீன குழுவினரின் இந்த வித்தியாசமான நடத்தைக்கான காரணத்தை குறித்து சமூக வலைதளங்களில் பயனர்கள் பல்வேறு யூகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News