இந்தியா

போலவரம் நீர்ப்பாசன திட்டம்- பிரதமருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

Published On 2022-08-22 09:41 GMT   |   Update On 2022-08-22 11:56 GMT
  • மத்திய அரசு திட்டங்களுக்கான நிதிகளை விடுவிப்பது குறித்து பிரதமருடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை.
  • போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்தின் மதிப்பு ரூ.55,548 கோடி என திருத்தப்பட்டது.

புதுடெல்லி:

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது போலவரம் நீர்ப்பாசன திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

இதுதவிர விஜயநகரம் மாவட்டம் போகபுரம் விமான நிலையம், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மற்றம் பல்வேறு மத்திய அரசு திட்டங்களுக்கான நிதிகளை விடுவிப்பது குறித்தும் பிரதமருடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

ஆந்திராவில் 2.91 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கவும், 960 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், தொழிற்சாலைகள் மற்றும் 540 கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், கோதாவரி ஆற்றில் போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த ரூ.35,000 கோடி செலவாகும் என ஆந்திர அரசு முதலில் மதிப்பிட்டிருந்தது. ஆனால், அதிக செலவு ஏற்படும் என்பதால் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை நிறைவேற்ற மாநில அரசால் முடியவில்லை.

எனவே, நீர்ப்பாசனத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.55,548 கோடி என திருத்தப்பட்டது. இந்த திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News