இந்தியா
தற்கொலை

கணவர் வீட்டுக்கு போகச் சொன்னதால் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

Published On 2022-05-29 07:39 GMT   |   Update On 2022-05-29 07:39 GMT
கல்யாணி தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காளஹஸ்தியில் உள்ள தனது தாய் விஜயலட்சுமி வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த ஈதுல குண்டா பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கல்யாணி (வயது 28). கல்யாணிக்கும் மோகனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு முனி மேதான்ஸ் என்ற 3 வயது மகன் இருந்தார்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கல்யாணி தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காளஹஸ்தியில் உள்ள தனது தாய் விஜயலட்சுமி வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார். மனைவியையும், குழந்தையையும் மோகன் மீண்டும் வந்து அழைத்துச் செல்லாததால் தாய் வீட்டிலேயே கல்யாணி தங்கி இருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் வேலை செய்து வந்த கல்யாணியின் தம்பி கடந்த சில நாட்களுக்கு முன்பு காளஹஸ்தி வந்தார். அவர் கல்யாணியிடம் எவ்வளவு நாட்கள்தான் தாய் வீட்டிலேயே இருப்பாய். உனது குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு போ என திட்டியதாக கூறப்படுகிறது.

கணவர் வீட்டில் தான் பிரச்சனை என தாய் வீட்டிற்கு வந்தால் இங்கும் தன்னை கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கல்யாணி படுக்கை அறைக்கு சென்று அங்கு வைத்திருந்த விஷத்தை எடுத்து குழந்தையின் வாயில் ஊற்றினார். குழந்தை சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது.

இதையடுத்து கல்யாணியும் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். படுக்கை அறைக்கு சென்ற கல்யாணி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் விஜயலட்சுமி நீண்ட நேரம் கதவை தட்டினார். கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது சிறுவன் வாயில் நுரை தள்ளியடியும், கல்யாணி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கல்யாணி மற்றும் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக காளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து 2 டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News