இந்தியா
மரணமடைந்த பிரபாகர் சைல்

ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கு- முக்கிய சாட்சி மாரடைப்பால் மரணம்

Published On 2022-04-02 07:54 GMT   |   Update On 2022-04-02 07:54 GMT
என்.சி.பி சாட்சியான கேபி கோசாவியின் மெய்க்காப்பாளர் என்று கூறிக்கொண்ட பிரபாகர் சைல், ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பிறகு, 25 கோடி ரூபாய் ஒப்பந்தம் குறித்து கோசாவி விவாதித்ததைக் கேட்டதாக ஒரு வாக்குமூலத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.
மும்பை கடற்கரையில், சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைப் பொருள் விருந்தில் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் தேசிய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு (என்சிபி) அதிகாரிகளால் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.

என்.சி.பி. சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்யன் கான் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின்  சாட்சியான பிரபாகர் சைல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

என்.சி.பி சாட்சியான, கேபி கோசாவியின் மெய்க்காப்பாளர் என்று கூறிக்கொண்ட பிரபாகர் சைல், ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பிறகு, 25 கோடி ரூபாய் ஊதிய ஒப்பந்தம் குறித்து கோசாவி விவாதித்ததைக் கேட்டதாக ஒரு வாக்குமூலத்தில் குற்றம் சாட்டினார்.
 
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பிரபாகர் சைல் நேற்று மாலை செம்பூரில் மாஹூலில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் இறந்தார். அவர் மும்பையின் காட்கோபரில் உள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டாக அறிவிக்கப்பட்டார். அவர் மாரடைப்பால்தான் இறந்தார் என்றும், அவரது குடும்பத்தினர் மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும் உறுதிப்படுத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: ஜி.கே.வாசன்
Tags:    

Similar News