இந்தியா
சித்ரதுர்கா அருகே கிராம மக்களை விரட்டி, விரட்டி கொத்தும் காகம்

சித்ரதுர்கா அருகே கிராம மக்களை விரட்டி, விரட்டி கொத்தும் காகம்

Published On 2022-01-29 02:12 GMT   |   Update On 2022-01-29 02:12 GMT
கர்நாடக மாநிலம் ஒப்லாபுரா எனும் கிராமத்தில் காகம் ஒன்று அப்பகுதியிலேயே பறந்து திரிந்து நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்ளை விரட்டி, விரட்டி கொத்திவிட்டு பறந்து செல்கிறது.
சிக்கமகளூரு :

அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா தாலுகா பரமசாகரா அருகே ஒப்லாபுரா எனும் கிராமம் உள்ளது. இந்த நிலையில் ஒப்லாபுரா கிராமத்தில் காகம் ஒன்று அப்பகுதியிலேயே பறந்து திரிந்து நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்ளை விரட்டி, விரட்டி கொத்திவிட்டு பறந்து செல்கிறது. இதேபோல் கிராமத்தில் விளையாடும் சிறுவர்களையும் ஒற்றை காகம் விட்டுவைக்காமல் கொத்தி வருகிறது.

இதனால் பொதுமக்கள் தலையில், முகம் உள்ளிட்ட இடங்களில் காகத்திடம் கொத்து வாங்கி காயம் அடைகின்றனர். இதற்கிடையே அந்த காகத்தை பிடிக்க கிராம மக்கள் முயன்றனர். ஆனால் அவர்களால் காகத்தை பிடிக்கமுடியவில்லை. இதன்காரணமாக அந்த ஒற்றை காகத்திற்கு பயந்து கிராம மக்கள் தலையில் துண்டு கட்டி வெளியே செல்லும் பரிதாப நிலை உள்ளது.

இதே நிலை கடந்த 6 மாதம் இருப்பதாக கிராம மக்கள் குமுறுகின்றனர். இதையடுத்து ஒற்றை காகம் எதற்காக இப்படி மக்களை கொத்துகிறது என்று கிராம மக்கள் ஆராய்ந்தனர். அப்போது கிராமத்தில் சில மூத்த குடிமக்கள் கிராமத்தின் எல்லைப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் சாமி கோவிலில் பல்வேறு காரணங்களாக திருவிழா நடத்தப்படாமல் இருப்பதும், கும்பாபிஷேகம் நடத்தாமல் இருப்பதும் பற்றியும் கூறினர்.

ஆஞ்சநேயர் சாமி கோவிலில் விழா நடத்தாமல் இருப்பதே காகம் தாக்குவதற்கு காரணம் என்றும், எனவே விரைவில் கோவில் விழாவை நடத்தவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இருப்பினும் ஒற்றை காகம் விரட்டி விரட்டி கொத்துவதால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்து போய் முடங்கி கிடக்கிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News