இந்தியா
கோப்புப்படம்

ரெயிலில் சத்தமாக பாட்டு கேட்டு பயணிப்பவரா?... இனிமேல் உஷார்!!

Published On 2022-01-22 08:21 GMT   |   Update On 2022-01-22 12:25 GMT
ரெயிலில் மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சத்தமாக பாட்டு கேட்டு பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரெயில்வேத்துறை அறிவித்துள்ளது.
ரெயில் பயணத்தின்போது பயணிகள் பாட்டுக் கேட்டுக்கொண்டே செல்வது வழக்கம். அதேபோல் ரெயில் சென்று கொண்டிருக்கும்போது, செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காது. இருந்தாலும் டயல் செய்து சத்தமாக பேசுவதும் வழக்கம்.

இது மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை கொடுக்கும். பொறுமை தாங்க முடியாத பயணிகள், அதிகாரிகளிடம் புகார் அளிப்பதும் உண்டு. ஆனால்  அவர்களுடைய போன் அவர்கள் பேசுகிறார்கள், அவசரம் என்பார்கள், நாங்கள் என்ன செய்ய முடியும்? என அதிகாரிகள் கைவிரிப்பதும் நடப்பதுண்டு.

ஆனால், இது அனைத்திற்கும் முடிவு கட்ட இந்திய ரெயில்வே முடிவு செய்து புதிய விதியை கொண்டுவந்துள்ளது. இனிமேல் ரெயில்களில் சத்தமாக பாட்டுக் கேட்டுக்கொண்டே சென்றாலும், சத்தம் போட்டு பேசினாலும் நடவடிக்கை பாயும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டால், ரெயில் ஊழியர்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

ரெயில் ஊழியர்கள், ஆர்.பி.எஃப். வீரர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்டோர் பயணிகள் இன்னல்களை சந்திக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை மேற்கு ரெயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும்,  குரூப்பாக பயணம் செய்யும்போது, இரவு 10 மணிக்குப்பிறகு குறிப்பிட்ட இரவு நேர லைட்-ஐ தவிர மற்ற லைட்டுகளை ஆன் செய்து வைக்க அனுமதி கிடையாது. பயணிகள் இதை கேட்க தவறினால், நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News