இந்தியா
144 தடை உத்தரவு

பெங்களூருவில் சிவாஜி சிலை அவமதிப்பு - பெலகாவியில் 144 தடை உத்தரவு

Published On 2021-12-19 18:56 GMT   |   Update On 2021-12-19 18:56 GMT
கர்நாடகத்தில் சத்ரபதி சிவாஜி சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூர்:

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சத்ரபதி சிவாஜி மன்னர் சிலை மற்றும் சங்கொள்ளி ராயண்னா சிலை அவமதிக்கப்பட்டது. இந்த விவகாரம் மராத்தியர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சத்ரபதி சிவாஜி சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் கர்நாடக மாநிலம் பெலகாவியில் மராட்டிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறைக்கு திரும்பியது. ஒரு சில இடங்களில் கர்நாடக மாநில முதல் மந்திரி பசவராஜ் பொம்மையின் உருவ பொம்மையை எரித்தனர்.

கலவரத்தின்போது போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. 26 வாகனங்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன. கலவரம் தொடர்பாக மகாராஷ்டிரா அமைப்பினர் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, கர்நாடகத்தில் சிவாஜி சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் 20ம் தேதி காலை 6 மணி முதல் 22ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என போலீஸ் கமிஷனர்  தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News