இந்தியா
பிரதமர் மோடி

ரூ.18000 கோடியில் நலத்திட்டங்கள் - பிரதமர் மோடி இன்று டேராடூன் செல்கிறார்

Published On 2021-12-04 01:26 GMT   |   Update On 2021-12-04 01:26 GMT
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்கிறார். அங்கு 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 11 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் என பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 8300 கோடி ரூபாய் செலவில் டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 

பொதுவாக, டெல்லியில் இருந்து டேராடூன் வருவதற்கு 6 மணி நேரம் பயணிக்க வேண்டும். இந்த வழித்தடம் திறக்கப்பட்டால், இரண்டரை மணி நேரத்தில் வந்துசேர முடியும். மேலும், ஹரித்துவார், முசாபர் நகர், ஷாம்லி, யமுனா நகர், பக்பத், மீரட், பராவுட் ஆகிய முக்கிய சுற்றுலா நகரங்களை இந்த வழித்தடம் இணைக்கிறது. 

அதேபோல், டேராடூன் - போன்டாசாஹிப் சாலை வழித்தடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 1700 கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ள இந்த சாலை அமைக்கப்பட்டால் சுற்றுலாத்தல பகுதிகளை இணைக்க முடியும். 

நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் உள்ளிட்ட 7 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். டேராடூனில் நீர்மின் திட்டம் மற்றும் இமயமலை கலாச்சார மையத்தையும் திறந்து வைக்கிறார்.

Tags:    

Similar News