இந்தியா
மன்மோகன் சிங்

குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் மன்மோகன் சிங் ஆப்சென்ட்

Published On 2021-12-02 12:27 GMT   |   Update On 2021-12-02 12:27 GMT
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக இருந்தவருமான மன்மோகன் சிங்கிற்கு வயது 89. 
கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதி மன்மோகன் சிங்கிற்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு அக்டோபர் 31ம் தேதி மன்மோகன் சிங் வீட்டிற்கு திரும்பினார். ஆனால், தொடர்ந்து ஓய்வில் இருக்கும் அவர்,  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், அவை உறுப்பினர் தொடர் விடுப்பு கோரினால், அவையின் அனுமதி பெறுவது வழக்கம். அதன்படி, மாநிலங்களவைக்கு விடுப்பு விண்ணப்ப கடிதம் ஒன்றை மன்மோகன் சிங் அனுப்பியுள்ளார். அதில், உடல்நலப் பிரச்சனை காரணமாக மாநிலங்களவையில் தற்போது நடைபெற்று வரும் 255வது அமர்வில் (குளிர்கால கூட்டத்தொடர்) கலந்துகொள்ள முடியவில்லை. இதனால், நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை விடுப்பு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

வழக்கம்போல் இன்று மாநிலங்களவை கூடியதும், அவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம், மன்மோகன் சிங் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, மன்மோகன் சிங்கின் கடிதத்தை குறிப்பிட்டுப் பேசிய வெங்கையா நாயுடு, உடல்நல பிரச்சனை காரணமாக அவைக்கு வர இயலாத காரணத்தால் மன்மோகன் சிங்கின் விடுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
Tags:    

Similar News