செய்திகள்
ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைத்ததற்கு காரணம் இதுதான் -ப.சிதம்பரம் காட்டம்

Published On 2021-11-04 10:30 GMT   |   Update On 2021-11-04 10:30 GMT
அதிக வரிகள் விதிப்பதால் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது என்ற எங்கள் குற்றச்சாட்டை மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக ப.சிதம்பரம் கூறினார்.
புதுடெல்லி:

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்த மத்திய அரசு, வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என்று கூறி வந்தது. ஆனால், திடீரென நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்துள்ளதால், இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. இது இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில், கலால் வரி குறைப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

பல்வேறு மாநிலங்களல் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியையும், எரிபொருள் மீதான கலால் வரி குறைப்பையும் இணைத்து கருத்து வெளியிட்டுள்ளார்.

‘இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு துணை தயாரிப்பை உருவாக்கியுள்ளன... பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. குறிப்பாக, அதிக வரிகள் விதிப்பதால் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது என்ற எங்கள் குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துகிறது. மேலும் மத்திய அரசின் பேராசையால்தான் எரிபொருள் மீது அதிகாமன வரி விதிக்கப்படுகிறது’ என ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ப.சிதம்பரத்தின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், ‘மோடி அரசு மக்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் உடன் இருக்கிறது’ என்றார்.
Tags:    

Similar News