செய்திகள்
கைது

காளஹஸ்தி கோவிலில் 5 பவுன் நகை, பணம் திருடிய ஊழியர் கைது

Published On 2021-07-23 09:19 GMT   |   Update On 2021-07-23 09:19 GMT
காளஹஸ்தி கோவிலில் உண்டியல் பணம் எண்ணும்போது ஊழியர் ஒருவரே நகை, பணம் திருடிய சம்பவம் கோவில் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இங்கு திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு பரிகார பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

பரிகார பூஜை செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் உண்டியலில் நகை, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

உண்டியலில் செலுத்தப்படும் நகை பணத்தை கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று உண்டியல் காணிக்கையாக கிடைத்த பணம் மற்றும் நகை எண்ணும் பணி நடைபெற்றது.

அப்போது கோவில் ஊழியர்கள் கிரண் (வயது40) என்பவர் உண்டியல் பணம் ரூ.75 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகைகளை திருடி தன்னுடைய பையில் வைத்துள்ளார். உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்து வந்த ஊழியர் ஒருவர் இதனை கண்டு திடுக்கிட்டார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து கோவிலில் உள்ள விஜிலென்ஸ் அதிகாரிகள் ஊழியரை பிடிக்க சென்றனர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் துரத்திச் சென்று அவரை பிடித்து அவரது பையை சோதனையிட்டனர். அதில் ரூ.75 ஆயிரம் பணம் மற்றும் 5 பவுன் நகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை காளஹஸ்தி போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து ஏற்கனவே இதுபோல் திருட்டில் ஈடுபட்டு உள்ளாரா? அல்லது தற்போதுதான் முதல்முறையாக திருட்டில் ஈடுபட்டரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News