செய்திகள்
வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுவேந்து அதிகாரி

மேற்கு வங்காள சட்டசபையில் கடும் அமளி- பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

Published On 2021-07-02 10:28 GMT   |   Update On 2021-07-02 10:28 GMT
தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாததால் பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆட்சியை பிடிக்கும் பாஜகவின் கனவு தகர்ந்தது. தேர்தலுக்கு பிறகு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாகவும், அவரை மாற்ற வேண்டும் என்றும் முதல்வர் மம்தா வலியுறுத்தி வருகிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மேற்கு வங்காள புதிய சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஆளுநர் ஜெகதீப் தங்கார் உரையாற்றினார். அப்போது, தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாததால் 
பாஜக
 எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். ‘பாரத மாதா வாழ்க’ என்ற கோஷம் எழுப்பியபடி கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.



அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிடவில்லை என்றும், ஆளுநரின் உரையானது மம்தா அமைச்சரவை எழுதிக்கொடுத்த உரை என்பதால் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார். வன்முறையால் இறந்துபோன பாஜக தொண்டர்களின் புகைப்படங்களை ஏந்தி, சட்டசபையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் சுவேந்து அதிகாரி கூறினார்.

தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் இறந்தவர்கள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News