செய்திகள்
மத்திய மந்திரிசபை கூட்டம் (கோப்பு படம்)

மோடி தலைமையில் நாளை மத்திய மந்திரிசபை கூடுகிறது

Published On 2021-06-22 17:04 GMT   |   Update On 2021-06-22 17:04 GMT
மத்திய மந்திரிசபை விரிவாக்கம் உள்ளிட்ட பிற முக்கிய விவகாரங்கள் குறித்து மந்திரிசபை கூட்டத்தில் பேசப்படலாம் என தெரிகிறது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்புநிலை திரும்புகிறது. அடுத்து கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்பதால், அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.

இந்நிலையில், டெல்லியில் நாளை மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளதாக ஏஎன்ஐ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிப் பணிகளை மேலும் துரிதப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி சமீபத்தில், ஆலோசனை நடத்தினார். எனவே, மத்திய மந்திரிசபை விரிவாக்கம் உள்ளிட்ட பிற முக்கிய விவகாரங்கள் குறித்து நாளைய மந்திரிசபை கூட்டத்தில் பேசப்படலாம் என தெரிகிறது.  

மத்திய மந்திரி சபையில் இருந்து சிவ சேனா, சிரோமணி அகாலி தளம் வெளியேறியதாலும், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவாலும் மந்திரி சபையில் சில இடங்கள் காலியாக உள்ளன. இதனால் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டால், கூட்டணியின் முக்கிய தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஐக்கிய ஜனதா தளத்திற்கும் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என அக்கட்சியின் தலைவர் ஆர்.பி.சிங் கூறி உள்ளார்.
Tags:    

Similar News