செய்திகள்
பினராயி விஜயன்

கேரள மாநில அமைச்சரவையில் முதல்வர் பினராயி விஜயனைத் தவிர மற்ற அனைவரும் புதியமுகம்

Published On 2021-05-18 13:22 GMT   |   Update On 2021-05-18 13:22 GMT
பினராயி விஜயன் 20-ந்தேதி முதல்வராக பதவி ஏற்கும் நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பிடிக்க இருப்பவர்கள் அனைவரும் புதியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். முதல்வருடன், 21 அமைச்சா்களுக்கும் மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

மொத்தமுள்ள 21 அமைச்சா்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 அமைச்சா்களும், கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 அமைச்சா்களும், கேரள காங்கிரஸ் (எம்), மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு அமைச்சா் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

21 அமைச்சா்களுக்கு மேல் இடம் அளிக்கமுடியாத காரணத்தால் ஒரு எம்எல்ஏக்களைக் கொண்ட நான்கு கூட்டணி கட்சிகளுக்கு சுயற்சி முறையில் அமைச்சா் பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 12 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் சட்டப்பேரவை தலைவர் மற்றும் முதல்வராக பினராயி விஜயன், அமைச்சர்களாக எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசவன், சாஜி செரியன், வி.சிவன்குட்டி, முகமது ரியாஸ், டாக்டர்.ஆர்.பிந்து, வீனா ஜார்ஜ் மற்றும் வி.அப்துல் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறவுள்ள 21 அமைச்சர்களும் புதியவர்கள் என்றும் முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவுக்கும் அமைச்சரவையில் இடமில்லை என மாநிலக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், சட்டப்பேரவை தலைவராக எம்.பி.ராஜேஷ், கட்சியின் கொறடாவாக கே.கே.சைலாஜாவும், சட்டப்பேரவையின் கட்சி செயலாளராக டி.பி.ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News