செய்திகள்
மரங்களை அகற்றும் மீட்புக் குழுவினர்

குஜராத்தில் கரையைக் கடந்தது டவ் தே புயல் - மரங்கள் வேரோடு சாய்ந்தன

Published On 2021-05-17 22:56 GMT   |   Update On 2021-05-17 22:56 GMT
மும்பை நகரை புரட்டிப்போட்ட டவ் தே புயல், குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.
அகமதாபாத்:

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி பகுதியையொட்டிய பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. கேரளா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது. இந்த புயல் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

புயலை எதிர்கொள்ள குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன. மேலும் பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இதற்கிடையே, அதி தீவிரபுயல் நேற்று அதிகாலை மேலும் தீவிரமடைந்தது. புயல் வேகமாக நகர தொடங்கியது. இதன் காரணமாக ஒருநாள் முன்னதாகவே நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர்- மாகுவா இடையே கரையை நெருங்கியது. முன்னதாக மும்பை கடல் பகுதியில் 145 கி.மீ. தொலைவில் புயல் நகர்ந்து சென்றது.



இதன் காரணமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்ய தொடங்கியது. மும்பையில் நேற்று 120 கி.மீ. வேகம் வரை சூறை காற்று வீசியது. இடைவிடாத மழையும் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நாட்டின் நிதி தலைநகர் மும்பை நிலைகுலைந்து போனது. இதேபோல மும்பை அருகே உள்ள இதர கடலோர மாவட்டங்களிலும் சுழன்று அடித்த காற்றுடன், கனமழையும் கொட்டி தீர்த்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும்போது மணிக்கு 155 முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டு இருந்தது. சூறைக்காற்று சுழன்று அடித்ததால் குஜராத்தை டவ் தே புயல் குதறி போட்டது. அங்கு கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று, பேய் மழை காரணமாக பல இடங்கள் சின்னாபின்னமானது. ஏராளமான மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன.
Tags:    

Similar News