செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்டில் 7 நீதிபதி பணியிடங்கள் காலி - கொலீஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு காத்திருப்பு

Published On 2021-05-16 19:11 GMT   |   Update On 2021-05-16 19:11 GMT
நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்டுகளில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 1,080 ஆகும். 660 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். 420 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் 7 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. ‘கொலீஜியம்’ என்னும் மூத்த நீதிபதிகள் தேர்வுக்குழுவின் பரிந்துரைக்காக மத்திய அரசு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாட்டின் உச்ச நீதி அமைப்பான சுப்ரீம் கோர்ட்டில் 7 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வால் ஒரு பணியிடம் காலியானது.



அவரைத் தொடர்ந்து நீதிபதிகள் தீபக் குப்தா, ஆர்.பானுமதி, அருண் மிஷ்ரா, இந்து மல்கோத்ரா, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே ஆகியோர் வரிசையாக ஓய்வு பெற்றனர்.

கடந்த மாதம் நீதிபதி மோகன் எம். சாந்தன கவுடர் திடீரென மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் மொத்த பணியிடங்களான 34-ல் 27 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 7 பணியிங்கள் நிரப்பப்படுவதற்காக காத்திருக்கின்றன.

அலகாபாத் ஐகோர்ட்டிலும், கொல்கத்தா ஐகோர்ட்டிலும் தலைமை நீதிபதியின்றி தற்காலிக தலைமை நீதிபதிகள் பொறுப்பில் உள்ளனர்.

இந்த மாத இறுதியில் சத்தீஷ்கார் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியும், அடுத்த மாத இறுதியில் இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதியும் ஓய்வு பெறுகிறார்கள்.

நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்டுகளில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 1,080 ஆகும். 660 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். 420 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது மே 1-ந் தேதி மத்திய நீதித்துறை இணையதள புள்ளிவிவர நிலவரம் ஆகும்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பணியிடங்கள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப ‘கொலீஜியம்’ என்று சொல்லப்படக்கூடிய சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளைக்கொண்ட தேர்வுக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இந்த பரிந்துரைக்காக தற்போது மத்திய அரசு காத்திருக்கிறது.
Tags:    

Similar News