செய்திகள்
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட கவர்னர் ஜக்தீப் தங்கர்

நான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது - கவர்னர் ஜக்தீப் தங்கர்

Published On 2021-05-13 23:47 GMT   |   Update On 2021-05-13 23:47 GMT
மேற்குவங்காள அரசின் எதிர்ப்பை மீறி கவர்னர் ஜக்தீப் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று நேரில் பார்வையிட்டார்.
கொல்கத்தா:

மேற்குவங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. 3-வது முறையாக மேற்குவங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவியேற்றுள்ளார்.

தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து பாஜக கட்சியினர், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

மேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்காள அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வன்முறை சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளதாக மேற்குவங்காள கவர்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.

வன்முறை நடந்த பகுதிகளை கவர்னர் பார்வையிடுவதற்கு மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், மாநில அரசின் எதிர்ப்பை மீறி கவர்னர் ஜக்தீப் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும், வன்முறையில் உறவினர்களை இழந்தவர்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வன்முறை நடைபெற்ற பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் கவர்னர் ஜக்தீப் தங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:



வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் பார்வையிடப் போகிறேன் என்று நான் மாநில அரசிடம் கூறியபோது, மாநில அரசின் அனுமதி இல்லாமல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவர்னர் பார்வையிடக் கூடாது என்று முதல்மந்திரி கூறினார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

இது தொடர்பாக மாநில முதல் மந்திரிக்கு நான் கடிதம் எழுதினேன். அதில் இத்தகைய செயல் அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தேன். மேலும், எனது பயணத்தைத் தொடங்கினேன்.

நான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற போதும் மேற்குவங்காளத்தில் மட்டும் வன்முறை நடப்பது ஏன்? என்பது எனக்கும், உங்களுக்கும், அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயம்.  

தேர்தல் நேரத்தில் முதல் மந்திரியின் நடத்தை சரியாக இல்லை என்பதை நான் ஆய்வு செய்துள்ளேன். அது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தது என தெரிவித்தார்.
Tags:    

Similar News