செய்திகள்
புதின், மோடி கோப்புப்படம்

ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Published On 2021-04-28 18:56 GMT   |   Update On 2021-04-28 18:56 GMT
ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக நல்லுறவு நிலவி வருகிறது. இந்தியாவின் நம்பகமான கூட்டாளி நாடாக ரஷியா திகழ்கிறது.
புதுடெல்லி:

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உள்பட பல விஷயங்கள் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக நல்லுறவு நிலவி வருகிறது. இந்தியாவின் நம்பகமான கூட்டாளி நாடாக ரஷியா திகழ்கிறது.

இந்த நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

வளர்ந்து வரும் கொரோனா தொற்று நோய் நிலைமை குறித்து புதினுடன் மோடி விவாதித்தார். கொரோனா வைரசின் இரண்டாவது அலைக்கு எதிரான போராட்டத்தில் தனது ஆதரவை வழங்கிய புதினுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.



இந்த பேச்சைத் தொடர்ந்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

இன்று (நேற்று) எனது நண்பர் ரஷிய அதிபர் புதினுடன் ஒரு சிறந்த உரையாடலை மேற்கொண்டேன். வளர்ந்து வரும் கொரோனா பெருந்தொற்றுபற்றி நாங்கள் விவாதித்தோம். மேலும், இந்த பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ரஷியாவின் உதவி மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன்.

விண்வெளி ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, ஹைட்ரஜன் பொருளாதாரம் உள்பட பல்வேறு மாறுபட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து நாங்கள் ஆராய்ந்தோம்.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் எங்கள் ஒத்துழைப்பு, கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு மனித குலத்துக்கு உதவும்.

நமது வலுவான ராணுவ கூட்டாண்மைக்கு மேலும் வேகத்தை சேர்க்க இரு தரப்பு வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் (2 பிளஸ் 2) பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டோம்.

இவ்வாறு அந்த பதிவுகளில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உருவாக்கியதும், அதிக செயல்திறனைக்கொண்ட தடுப்பூசியாக இது திகழ்வதும், அடுத்த மாதம் இந்தியாவுக்கு இறக்குமதியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News