செய்திகள்
தேர்தல் ஆணையம்

பா.ஜனதா வேட்பாளர் காரில் ஓட்டு எந்திரம்- மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2021-04-02 11:12 GMT   |   Update On 2021-04-02 11:12 GMT
பா.ஜனதா தேர்தலில் தில்லுமுல்லு செய்ய சதித்திட்டம் தீட்டி உள்ளதாக காங்கிரசார் குற்றம்சாட்டினர்.

கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் நேற்று 2-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. அசாமின் ரதாபரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 149-இந்திரா எம்.வி பள்ளியில் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எந்திரங்களை கட்டுப்பாட்டு அறைக்கு எடுத்துச்செல்ல பாஜக வேட்பாளரின்  காரை தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

வாக்கு எந்திரம் பாஜக வேட்பாளரின் காரில் எடுத்துச்செல்லும் தகவல் அறிந்த எதிர்க்கட்சிகள் காரை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.  

வாக்கு எந்திரம் பாஜக பிரமுகருக்கு சொந்தமானவரின் காரில் எடுத்துச்செல்லப்பட்ட சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரிகள், “ கட்டுப்பாட்டு அறைக்கு வாக்கு எந்திரத்தை எடுத்துச் சென்ற கார் பழுதடைந்துவிட்டது. ஆகையால், அவ்வழியாக வந்த காரில் வாக்கு எந்திரத்தை கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு சென்றோம்” என கூறினர். இதுபற்றி ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. 

இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி  பாஜகவை எதிர்க்கட்சிகள்  கடுமையாக சாடின. வாக்கு எந்திரத்தை கைப்பற்றியதாக விமர்சித்துள்ளன. அசாமில் பாஜக வெல்ல இது மட்டுமே வழி என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் கோகாய் சாடியுள்ளார்.

இதற்கிடையே, வாக்கு எந்திரத்துடன் பாஜக வேட்பாளரின் காரில் சென்ற தேர்தல் அதிகாரிகள் 4 பேரை இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

Tags:    

Similar News