செய்திகள்
மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது - மம்தா பானர்ஜி

Published On 2021-03-19 22:48 GMT   |   Update On 2021-03-19 22:48 GMT
நந்திகிராம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கும் சுவேந்து அதிகாரியை எதிர்த்து முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது. குறிப்பாக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், சுவேந்து அதிகாரி, ரஜிப் பானர்ஜி போன்ற முக்கிய மந்திரிகள் என ஏராளமான தலைவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் ஐக்கியமாகினர். அவர்களில் பலர் பா.ஜனதாவில் தற்போது போட்டியிட சீட்டும் பெற்றிருக்கிறார்கள்.

இவ்வாறு நந்திகிராம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கும் சுவேந்து அதிகாரியை எதிர்த்து முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி, பர்மா மேதினிபூரில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது தனது கட்சியில் இருந்து விலகியவர்களை துரோகிகள் என அவர் வர்ணித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

திரிணாமுல் காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது. இந்த துரோகிகள் தற்போது பா.ஜனதாவின் வேட்பாளர்களாகி இருக்கிறார்கள். இது அந்த கட்சியிலேயே காலம் காலமாக உழைத்து வரும் விசுவாசிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்போது வீட்டில் இருந்தே அழுது புலம்புகிறார்கள்.

கடந்த காலங்களில் நான் கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கிறேன். எனது தலை, முதுகு மற்றும் உடலின் பிற பகுதிகள் அனைத்திலும் காயம் ஏற்பட்டு இருக்கின்றன. எனது கால்கள் மட்டும் தப்பியிருந்தன. ஆனால் தற்போது அவர்கள் என் காலை குறிவைத்திருக்கிறார்கள். நான் பிரசாரங்களில் பங்கேற்று விடக்கூடாது என்பதற்காக காலில் தாக்கினர். ஆனால் நான் ஒரு தெரு போராளி. என்னை அவர்களால் வீழ்த்த முடியாது.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
Tags:    

Similar News