செய்திகள்
கர்நாடக அமைச்சர் டாக்டர் சுதாகர்

பிரதமரே கொரோனா தடுப்பூசி போட்டபின், தயக்கம் ஏன்?: கர்நாடக மந்திரி

Published On 2021-03-01 15:12 GMT   |   Update On 2021-03-01 15:12 GMT
60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி தடுப்பூசி போட்டபின் ஏன் தயக்கம்? என கர்நாடக அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் ஜனவரி மாதம் 16-ந்தேதி நாடு தழுவிய அளவில் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கியது. அதன்பின் 2-வது டோஸ் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மார்ச் 1-ந்தேதியில் (இன்று) இருந்து 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி இன்று நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கியது. பிரதமர் மோடி டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மத்திய அமைச்சர்கள், துணை ஜனாதிபதி உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியே தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், சந்தேகம் ஏன்? என கர்நாடாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து கே. சுதாகர் கூறுகையில் ‘‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் தேவையானது. பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதன்மூலம் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக திகழ்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோரும், 45 வயதிற்கு மேற்பட்ட ஒருசில நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள். கர்நாடகாவில் 60 வயதை தாண்டியவர்கள் 60 லட்சம் பேரும், 45 வயதை தாண்டியவர்கள் 16 லட்சம் பேரும் தகுதியானவர்கள்.

பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், மக்கள் எந்தவித சந்தேகம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி தீவிரமான பரவலை தடுக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News