செய்திகள்
எடியூரப்பா

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும்: எடியூரப்பா

Published On 2021-02-25 03:37 GMT   |   Update On 2021-02-25 03:37 GMT
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க வனப்பகுதியில் அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு வனத்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

வனத்துறை வளர்ச்சிக்கு, ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகளின் உதவி மிகவும் முக்கியமானதாகும். அவர்களுடன் நட்புறவுடன் இருக்க வேண்டியது ஒவ்வொரு வனத்துறை அதிகாரிகளின் கடமையாகும். மாநிலத்தில் பசுமை மண்டலத்தை அதிகப்படுத்த வேண்டும். தற்போது பசுமை மண்டல பகுதி 22.8 சதவீதமாக இருக்கிறது. இதனை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்க தயாராக இருக்கிறது. விரைவில் வெயில் காலம் தொடங்க உள்ளது. இந்த நேரத்தில் வனப்பகுதிகளில் காட்டுத்தீ உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறும். இதனை தடுக்க வனத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வனத்துறையின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது. வனத்துறையை மேம்படுத்துவதுடன் காடுகளை பாதுகாக்க ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். வனப்பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். அதற்கு பதிலாக கூடுதலாக மரக்கன்றுகளை வனத்துறையினர் நட வேண்டும். மரங்கள் அதிகப்படியாக வளர்க்கப்படுவதன் மூலமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.

குறிப்பாக வனப்பகுதிகளில் பல்வேறு விதமான பழங்களை கொடுக்கும் மரங்களை வனத்துறையினர் வளர்க்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டும். இவ்வாறு பழ மரங்களை வளர்ப்பதன் மூலம் வனவிலங்குகள், பறவைகளுக்கு அந்த பழங்கள் உணவாக கிடைக்கும். மரங்கள் அதிகப்படியாக வளர்ப்பதன் மூலம் வனப்பகுதியும் விரிவடையும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை மந்திரி அரவிந்த் லிம்பாவளி மற்றும் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டார்.
Tags:    

Similar News