செய்திகள்
ரோஜா மலர்கள்

நாளை காதலர் தினம் கொண்டாட்டம்- பெங்களூருவில் 50 லட்சம் ரோஜா மலர்கள் புக்கிங்

Published On 2021-02-13 09:37 GMT   |   Update On 2021-02-13 09:37 GMT
காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு 25 சதவீதம் ரோஜா மலரின் தேவை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.
பெங்களூரு:

உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் காதலர் தினம் கொண்டாட ஸ்ரீராம் சேனா உள்பட பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இதுவரை பிப்ரவரி 14-ந் தேதி மட்டுமே காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.

பெங்களூருவில் இயங்கி வரும் பல அமைப்புகள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 7-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை ஒருவாரம் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அதில் முழு வெற்றியும் கிடைத்தது.

அதன்படி நேர காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இரு இதயங்கள், ஒன்று சேருவதற்கு ஏற்ற வகையில் கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு பரிசு வழங்குவதற்காக பெரிய ஜுவல்லரி ஷோரூம்களில் விதவிதமான தங்க ஆபரணங்கள் தயாரித்து இப்போதே விற்பனைக்கு வைத்துள்ளனர்.

பெரிய கிப்ட் ஷாப்களில் விதவிதமான பரிசு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. நாளை ஞாயிற்றுகிழமை கல்லூரிகள், அலுவலகங்கள் விடுமுறை என்பதால், பெரும்பான்மையான காதலர்கள் இன்றே காதலர் தினம் கொண்டாட தயாராகி வருகிறார்கள். ஆண்டுதோறும் காதலர் தினத்தில் ரோஜா மலர் முக்கிய பங்களிக்கிறது.

கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு 25 சதவீதம் ரோஜா மலரின் தேவை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள். இதுவரை 50 லட்சம் ரோஜா மலர்கள் பல பூக்கடைகளில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. காதலர் தினமான நாளை மேலும் 10 லட்சம் ரோஜா மலர் விற்பனையாக வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். காதலர் தினத்தில் ரோஜா மலர் விற்பனை செய்வதில் டெல்லி முதலிடத்திலும், மும்பை 2-வது இடத்திலும், பெங்களூரு 3-வது இடத்தில் உள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

இதற்கு முன் காதலர் தினத்தின்போது கிரிட்டிங்ஸ் கார்டு கொடுக்கப்பட்டது. தற்போது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக செல்போன் எஸ்.எம்.எஸ்., டிவிட்டர், ஆன்லைன், பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் வாழ்த்து பரிமாறி கொள்வதால், கிரிட்டிங் கார்டு விற்பனை மந்தமாகியுள்ளது. அதே சமயத்தில் ஜுவல்லரி, கிப்ட் ஷோரூம்களில் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் புதுரக ஆடைகள் வாங்கி கொடுக்க பலர் விரும்புவதால், டெக்ஸ்டைல் கடைகளிலும் விற்பனை ஜோராக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காதலர் தினத்தை வரவேற்க ரிசார்ட், பெரிய ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் தயாராகி வருகிறது.

Tags:    

Similar News