செய்திகள்
சர்வதேச விமான கண்காட்சி

ஆசிய நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை வழங்க இந்தியா தயார் - ராஜ்நாத்சிங்

Published On 2021-02-05 00:13 GMT   |   Update On 2021-02-05 00:13 GMT
ஆசிய நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது என ராணுவ மந்திரிகள் மாநாட்டில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.
பெங்களூரு:

13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி நேற்று முன்தினம் பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டின் 2-வது நாளான நேற்று அதன் ஒரு பகுதியான மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் இந்திய ஆசிய மண்டல ராணுவ மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. 

இதில் ராணுவத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய ஆசிய மண்டலத்தில் இந்தியாவின் கடற்பரப்பு 75 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது. இந்த பகுதியில் அமைதி நிலவவும், பிற நாடுகளின் வளர்ச்சியிலும் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச வர்த்தகத்தில் இந்திய ஆசிய மண்டலத்தின் பங்கு முக்கியமானது. ஏனென்றால் உலகின் 50 சதவீத சரக்கு கப்பல் போக்குவரத்து இந்திய ஆசிய மண்டலத்தின் வழியாக தான் மேற்கொள்ளப்படுகிறது.

இது உலகின் சரக்கு போக்குவரத்தில் மூன்றில் 1 பங்கு, ஆயில் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் 2 பங்கு ஆகும். கடல் பாதுகாப்பு மற்றும் இந்திய ஆசிய மண்டல நாடுகளின் வளர்ச்சி தான் இந்தியாவின் முக்கிய நோக்கம். அதனால் நாம் பாதுகாப்பு, வணிகம், தொடர்பு, பயங்கரவாத ஒழிப்பு, உள்நாட்டு கலாசார பரிமாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருளாதாரத்தில் ஆழமான நல்லுறவு, கடலோர பகுதியில் இருக்கும் நாடுகளிடையே ஒத்துழைப்பு, நிலம், நமது கடல் பரப்பை பாதுகாக்கும் திறனை அதிகரித்தல், இந்த மண்டலத்தின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்தல், மீன்பிடிப்பை ஒழுங்குபடுத்துதல், இயற்கை பேரிடர், பயங்கரவாதம், சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள், முறைப்படுத்தப்படாத மீன்பிடிப்பு போன்றவற்றுக்கு கூட்டு செயல் திட்டத்தின் மூலம் தீர்வு காண வேண்டும்.

இந்திய ஆசிய நாடுகள் திருட்டு, போதைப்பொருள், ஆயுதம், ஆள் கடத்தல் போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்த விஷயங்களில் தேடுதல், மீட்பு பணிகளை கடல்சார் ஒத்துழைப்பு மூலம் சரியான முறையில் மேற்கொள்ள முடியும். 21-வது நூற்றாண்டில் கடல் வளங்கள் நமது வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. உலகில் சில பகுதிகளில் கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் நீடிப்பதால், அதன் எதிர்மறையான தாக்கம் நம் மீது ஏற்படுகிறது. அதனால் இந்திய ஆசிய மண்டலத்தில் நாம் அமைதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம்.

எச்.ஏ.எல். நிறுவனத்தில் 83 இலகுரக போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியில் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஆசிய நாடுகளுக்கு பல்வேறு வகையான ராணுவ தளவாடங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது. பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது என தெரிவித்தார்.

இந்திய ஆசிய மண்டலத்தில் உள்ள 28 நாடுகளில் 27 நாடுகளின் பிரதிநிதிகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கலந்து கொண்டனர். ராணுவத் துறை செயலாளர் அஜய்குமார், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி கரம்பிர் சிங், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, ராணுவ உற்பத்தி பிரிவு செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News