செய்திகள்
பள்ளி மூடல்

வடகர்நாடக மாவட்டங்களில் 4,500 தனியார் பள்ளிகள் மூடல்?

Published On 2021-02-01 01:46 GMT   |   Update On 2021-02-01 01:46 GMT
அரசு நிதி ஒதுக்காத காரணத்தால் வடகர்நாடக மாவட்டங்களில் 4,500 தனியார் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் வடகர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக அரசு நிதி ஒதுக்கி வருகிறது. வடகர்நாடக மாவட்டங்கள், கல்யாண கர்நாடக மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு வளர்ச்சி பணிகளை அரசு செய்து வருகிறது. இந்த நிலையில், வடகர்நாடகத்தில் உள்ள கலபுரகி, பீதர், ராய்ச்சூர், யாதகிரி, பல்லாரி உள்பட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 4,500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த தனியார் பள்ளிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக அரசிடம் இருந்து நிதி உதவி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தையும் அரசு 30 சதவீதம் குறைத்திருக்கிறது.

ஏற்கனவே 7 ஆண்டுகளாக அரசு நிதி உதவி வழங்காமல் இருக்கும் சூழ்நிலையில், தற்போது கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளதால், அந்த தனியார் பள்ளிகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 4½ லட்சம் மாணவ, மாணவிகளின் கல்வி கேள்வி குறியாகி உள்ளது.

இதுதொடர்பாக கூடிய விரைவில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அதன்பிறகு இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதால், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசு தீர்மானித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News