செய்திகள்
சிவமொக்கா விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

சிவமொக்கா வெடி விபத்தில் 5 பேர்பலி: உயர்மட்ட விசாரணைக்கு எடியூரப்பா உத்தரவு

Published On 2021-01-23 02:52 GMT   |   Update On 2021-01-23 02:52 GMT
சிவமொக்கா அருகே வெடி விபத்தில் 5 பேர் உடல் சிதறி பலியானார்கள். இதில் 3 பேரின் உடல் அடையாளம் தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
சிவமொக்கா :

கர்நாடக மாநிலம் சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா அப்பலகெரே அருகே ஹூனசோடு கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமம் அருகே ரெயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி ஒன்று அமைந்திருக்கிறது. நேற்றுமுன்தினம் இரவு இந்த கல்குவாரிக்கு ஒரு லாரி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் உள்ளிட்ட வெடிப்பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்தது. அந்த லாரியில் டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த லாரி இரவு 10.30 மணி அளவில் ரெயில்வே கிரசர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று லாரியில் இருந்த வெடிப்பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் லாரியும் வெடித்து சிதறி சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த வெடி விபத்தில் லாரியில் இருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த வெடி விபத்தின் தாக்கம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உணரப்பட்டது. மேலும் வெடி விபத்து நடந்த இடத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. அத்துடன் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்து நொறுங்கின. மேலும் ஏராளமான வீடுகளின் சுவர்களில் விரிசல் விழுந்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். மேலும் வெடி மருந்து நெடி சுற்றுவட்டார கிராமங்களில் வீசியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிவமொக்கா புறநகர் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

வெடி விபத்து நடந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருந்தது. லாரி சுக்கு நூறாக உருக்குலைந்து கிடந்தது. மேலும் அந்தப்பகுதியை சுற்றி கடுமையான வெப்பம் இருந்தது. இதனால் போலீசாரால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

முதல்கட்டமாக அந்த வெடி விபத்தில் 5 பேர் உடல் சிதறி பலியானது தெரியவந்தது. மேலும் அவர்களின் உடல்களையும் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் கர்நாடக பேரிடர் மீட்பு குழுவினர் உதவியுடன் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வெடி விபத்து நடந்த இடத்தில் பயங்கர வெப்பமும், வெடி மருந்து நெடியும் இருப்பதால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டது. நேற்று காலையும் மீட்பு பணி தொடங்கியது. தீயணைப்பு படையினர், போலீசார், கர்நாடக பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி வெப்பத்தை தணித்தனர். ஓரளவுக்கு ெவப்பம் தணிந்த பிறகு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தது.

அங்கு வேறு எதுவும் உடல் கிடக்கிறதா என்று கர்நாடக பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த வெடி விபத்து குறித்து சிவமொக்கா புறநகர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தமிழ்நாடு திருச்சியில் இருந்து ஒரு லாரியில் 50-க்கும் மேற்பட்ட பாக்ஸ்களில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் உள்ளிட்ட ெவடிப்பொருட்கள் சிவமொக்கா அருகே உள்ள ஹூனசோடு கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு கொண்டு வந்துள்ளனர். லாரியில் இருந்த வெடிப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதால் இந்த வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதறி கிடந்ததாலும், உடல் பாகங்கள் துண்டு, துண்டாக கிடந்ததாலும் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் வெடி விபத்தில் சிக்கி பலியான 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அந்தரகங்கே கிராமத்தை சேர்ந்த பிரவீன் (வயது 45), மஞ்சுநாத் (40), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பவன் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சிவமொக்கா மாவட்ட கலெக்டர் கே.பி.சிவக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சாந்தராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நேற்று காலையில் மாவட்ட பொறுப்பு மந்திரி ஈசுவரப்பா, கனிம வளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி, ராகவேந்திரா எம்.பி., கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் மீட்பு பணியையும் முடுக்கி விட்டனர்.

மேலும் மங்களூரு, பெங்களூருவில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வெடி விபத்துக்கான காரணம் குறித்து சோதனை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்குவாரியின் உரிமையாளர் அவினாஷ் குல்கர்னி, நரசிம்மன், ஜெலட்டின் குச்சி ஒப்பந்ததாரர் சுதாகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹூனசோடு கிராமத்தில் அனுமதியின்றி கல்குவாரி நடந்து வந்ததும், சட்டவிரோதமாக அங்கு ஜெலட்டின் குச்சி உள்ளிட்ட வெடிப்பொருட்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த மந்திரி ஈசுவரப்பா, கலெக்டர் சிவக்குமார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் சிவமொக்கா மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சிவமொக்காவில் இரவில் நடந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இது துரதிர்ஷ்டவசமான சம்பவம். சம்பவம் நடந்த இரவே அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினேன். தேவையான மீட்பு பணிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

இந்த வெடி விபத்து சம்பவத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News