செய்திகள்
ஸ்ரீகாந்த்

கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் கடற்படை நீர்மூழ்கி கப்பல் வல்லுனர் ஸ்ரீகாந்த் மரணம்

Published On 2020-12-16 02:01 GMT   |   Update On 2020-12-16 02:01 GMT
கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் வல்லுனர் ஸ்ரீகாந்த் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய கடற்படையின் மூத்த அதிகாரி வைஸ் அட்மிரல் ஸ்ரீகாந்த். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். மறுபடியும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை உறுதியானது. ஆனால் அன்று மாலையே அவர் கடுமையான மூச்சு திணறலால் அவதிப்பட்டார். உடனே அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் மரணம் அடைந்தார். அவர் கடற்படையில் மிக மூத்த நீர்மூழ்கி கப்பல் வல்லுனர் ஆவார். ‘சீ பேர்டு’ என்று அழைக்கப்படுகிற இந்திய கடற்படையின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தின் தலைமை இயக்குனராக பணியாற்றி வந்தார். வரும் 31-ந் தேதி பணி நிறைவு செய்ய உள்ள நிலையில் அவர் மரணம் அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “சீ பேர்டு தலைமை இயக்குனர் வைஸ் அட்மிரல் ஸ்ரீகாந்தின் திடீர் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது சிறப்பான பங்களிப்புகளையும், தேசத்துக்கு ஆற்றிய சிறப்பான சேவையையும் பாதுகாப்பு அமைச்சகமும், கடற்படையும் என்றென்றும் நினைவில் கொள்ளும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News