செய்திகள்
மந்திரி பிசி பட்டீல்

தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள்: பி.சி.பட்டீல் சர்ச்சை கருத்து

Published On 2020-12-04 02:03 GMT   |   Update On 2020-12-04 02:03 GMT
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள் என்று விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் குடகு மாவட்டம் மடிகேரியில் நேற்று தனது துறை தொடர்பாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசும்போது கூறியதாவது:-

விவசாயிகள் தங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தி கொள்ள கடுமையாக உழைக்கிறார்கள். கொரோனா நெருக்கடி காலத்திலும் விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லவும், சந்தைகளில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டன. விவசாய பணிகள் எந்த தடையும் இன்றி நடைபெற்றன. இதன் காரணமாக விவசாய உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கர்நாடகத்தில் தற்போது நல்ல மழை பெய்துள்ளது. 100 சதவீதத்திற்கும் அதிகமாக விதைப்பு பணிகள் நடந்துள்ளன. மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு புதிதாக 3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ள முடியும்.

மத்திய அரசின் புதிய சட்டங்களால் இடைத்தரகர்களின் தலையீடு முற்றிலுமாக ஒழியும். விவசாயிகள் நேரடியாக விளைபொருட்களை விற்று அதற்குரிய விலையை பெற முடியும். விவசாயிகள் வாழ்ந்து காட்ட வேண்டும். சிலர் பயந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது தவறு. அவ்வாறு தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள். தங்களது மனைவி, குழந்தைகளை தவிக்க விட்டு செல்வது நியாயமல்ல. குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை இல்லாத விவசாயிகளை என்னவென்று சொல்வது?.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு, அந்த பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும். தற்கொலை என்பது பிரச்சினைக்கு தீர்வாகாது. இதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். மண்டியாவில் ஒரு பெண் விவசாயி 6 ஏக்கரில் இயற்கை முறையில் விவசாயம் செய்து பழங்கள், காய்கறிகளை சாகுபடி செய்து விற்று நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.

பி.சி.பட்டீலின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை கோழைகள் என்று கூறிய மந்திரி பி.சி.பட்டீலுக்கு விவசாய சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார், குடகு மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் மானு சோசையா உள்ளிட்டோர், விவசாயிகளின் வளர்ச்சிக்கு மந்திரி பி.சி.பட்டீல் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், மந்திரி பதவிக்காக காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்த அவர் தான் கோழை என்றும் கூறினர்.

இதற்கிடையே விவசாயிகளை கோழைகள் என்று கூறிய மந்திரி பி.சி.பட்டீலின் கருத்தை அவரது மகள் நியாயப்படுத்தி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News