செய்திகள்
என்ஆர் சந்தோஷ்,

என்.ஆர்.சந்தோஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்: தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என விளக்கம்

Published On 2020-12-01 01:39 GMT   |   Update On 2020-12-01 01:39 GMT
முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என விளக்கம் அளித்தார்.
பெங்களூரு :

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா உள்ளார். அவரது அரசியல் செயலாளராக என்.ஆர்.சந்தோஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் எடியூரப்பாவின் உறவினர் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்தோஷ் தனது வீட்டில் மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஜான்வி தனது உறவினர்களுடன் சந்தோசை மீட்டு எம்.எஸ்.ராமய்யா மருத்துவமனையில் அனுமதித்தார்.

குடும்ப தகராறு காரணமாக அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. மேலும் கர்நாடக அரசு தொடர்பான ஒரு வீடியோ சந்தோஷ் மூலமாக வெளியே கசிந்ததாகவும், இந்த வீடியோ வெளியானால் அரசு கவிழ்ந்து விடும் என்றும், இதனால் தான் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்பட்டது. மேலும் இளம்வயதிலேயே சந்தோஷ், முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் ஆனதால், இது பிடிக்காத பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் சந்தோசுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், அவரை ராஜினாமா செய்ய சொல்லி தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் தான் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக சதாசிவநகர் போலீசார் சந்தோஷ் மீது வழக்கும் பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தோசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் சந்தோஷ் உடல்நலம் தேறினார்.

இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து பொது வார்டுக்கு நேற்று முன்தினம் சந்தோஷ் மாற்றப்பட்டார். அவர் நேற்று முன்தினம் இரவே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. இந்த நிலையில் பூரண குணமடைந்ததை அடுத்து நேற்று காலை 10.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து சந்தோஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது மருத்துவமனை வாசலில் வைத்து சந்தோஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தற்கொலைக்கு முயன்றது எதற்காக என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சந்தோஷ் பதில் அளிக்கையில் கூறியதாவது:-

நான் மனரீதியாக வலிமை உடையவன். நான் தற்கொலைக்கு முயன்றதாக தவறான தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவத்தன்று மதியம் எனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தேன். அங்கு உணவும் சாப்பிட்டேன். அந்த உணவு எனக்கு செரிமானம் ஆகவில்லை. இதனால் இரவு தூக்கம் வராமல் தவித்து கொண்டு இருந்தேன். இதன்காரணமாக தூக்கம் வர தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன்.

வழக்கமாக இரவு நேரத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு நான் தூங்குவது வழக்கம் தான். ஆனால் அன்று அளவு தெரியாமல் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டேன். இதனால் மயக்கம் போட்டு விழுந்தேன். என்னை எனது மனைவி ஜான்வி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். எனக்கும், எனது மனைவிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் அரசியல் காரணங்களுக்காக நான் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவும் தவறான தகவல். என்னை யாரும் ராஜினாமா செய்ய கூறி தொல்லை கொடுக்கவில்லை. நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?

ஏதோ வீடியோ விவகாரத்தில் தான் நான் தற்கொலைக்கு முயன்றதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். அவர் என் மீது இப்படி குறைகூறுவது இது முதல் முறை அல்ல. அவருடைய வீட்டில் விசாரணை அமைப்புகள் சோதனை நடத்திய போதெல்லாம் அவர் இப்படி தான் வீடியோ உள்ளது என்று கூறி வருகிறார். அவர் கூறுவது போன்று ஒரு வீடியோவும் இல்லை. அவர் எதற்கு எடுத்தாலும் முதல்-மந்திரி எடியூரப்பாவை குறை கூறி வருகிறார்.

தயவு செய்து எடியூரப்பாவை பற்றி பேச வேண்டாம் என்று அவரை கேட்டு கொள்கிறேன். ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததில் இருந்து டி.கே.சிவக்குமாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீதும் குறை கூறுகிறார். அவர் ஒரு மாதம் மனநல மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும். நான் 12 தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக கூறுகிறார்கள். யார் இப்படி தவறான தகவலை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News