செய்திகள்
நோட்டா

நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் - பீகாரில் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

Published On 2020-11-11 20:52 GMT   |   Update On 2020-11-11 20:52 GMT
பீகார் சட்டசபை தேர்தலில் நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருப்பது அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.
புதுடெல்லி:

பீகார் சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

243 இடங்களை கொண்ட சட்டசபையில் ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கு 125 இடங்களும், எதிர்அணியான மெகா கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைத்துள்ளன.

இதன்மூலம் தொடர்ந்து 4-வது முறையாக நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவி ஏற்க வழி பிறந்துள்ளது.

பீகார் தேர்தல் புள்ளிவிவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

இதன்படி பீகாரில் நடந்த 3 கட்ட தேர்தலில் 4 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்கு அளித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.3 கோடி ஆகும். எனவே பீகார் வாக்குப்பதிவு விகிதம் 57.09 சதவீதம் ஆகும்.

பீகார் சட்டசபை தேர்தலில், எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிக்கும் வகையில் நோட்டாவுக்கு 7 லட்சத்து 6 ஆயிரத்து 252 வாக்குகள் விழுந்துள்ளன. இது 1.7 சதவீதம் ஆகும். பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தகவல் அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

நோட்டா நடைமுறை மின்னணு வாக்கு எந்திரங்களில் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு அதே ஆண்டு செப்டம்பரில் அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில்தான் மின்னணு வாக்கு எந்திரங்களில் நோட்டா பொத்தான் சேர்க்கப்பட்டது.

அதற்கு முன்பாக எந்த வேட்பாளருக்கும் வாக்காளர் வாக்கு அளிக்க விரும்பாவிட்டால் 49-ஓ என்ற படிவத்தை வாக்குச்சாவடியில் நிரப்பி அளிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. ஆனால் இது வாக்கு அளிக்கும் ரகசியத்தை வெளியிட்டு விடுவதாக அமைந்தது.

இப்போது நோட்டா நடைமுறை மூலம் வாக்கு ரகசியம் காக்கப்படுகிறது.
Tags:    

Similar News