செய்திகள்
பிரதமர் மோடி

கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம் - பிரதமர் மோடி அறிவிப்பு

Published On 2020-11-08 18:58 GMT   |   Update On 2020-11-08 18:58 GMT
கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் ஹசிராவுக்கும், பாவ்நகர் மாவட்டம் கோகாவுக்கும் இடையே பிரமாண்ட படகு போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார்.

அங்கு வந்திருந்த விவசாயிகள், யாத்ரீகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் அவர் உரையாடினார்.

பின்னர், அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இரு ஊர்களுக்கும் இடையிலான சாலை வழி தூரம் 375 கி.மீ. ஆகும். பெரிய படகு போக்குவரத்து மூலம் 90 கி.மீ. தூரத்திலேயே சென்றடையலாம். பயண தூரமும் 12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும். தினமும் 3 தடவை இந்த சேவை செயல்படும்.

வளர்ந்த நாடுகளில், கப்பல்துறை அமைச்சகம், துறைமுகங்களையும், நீர்வழித்தடங்களையும் கூட கவனித்து வருகிறது. இந்தியாவிலும் இப்பணிகளை கப்பல்துறை அமைச்சகம் கவனிக்கிறது.

ஆகவே, கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர், கப்பல், துறைமுகங்கள், நீர்வழி அமைச்சகம் என்று மாற்றப்படுகிறது.

சரக்குகளை சாலைவழியாகவும், ரெயில் வழியாகவும் கொண்டு செல்வதை விட நீர்வழியாக கொண்டு சென்றால் செலவு குறைவாக இருக்கும்.

இதற்கு முன்பிருந்த அரசுகள், நீர்வழி மீது கவனம் செலுத்தவில்லை. நாங்கள்தான் கவனம் செலுத்தினோம். அதனால், கடலோரத்தில் புதிய துறைமுகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நாட்டின் 21 ஆயிரம் கி.மீ. தூர நீர்வழித்தடத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறோம்.

இதற்காக, ‘சாகர்மாலா’ திட்டத்தின்கீழ், 500-க்கு மேற்பட்ட திட்டங்கள் நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புடையவை. தற்சார்பு இந்தியாவை அடைய கடல்வளம் முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Tags:    

Similar News