செய்திகள்
உத்தவ் தாக்கரே

பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் - மகாராஷ்டிரா முதல் மந்திரி வேண்டுகோள்

Published On 2020-11-08 12:56 GMT   |   Update On 2020-11-08 12:56 GMT
பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புனே:

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன.  நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் கடுமையான பாதிப்பு எண்ணிக்கைகளுடன் முதல் இடத்தில் மராட்டியம் உள்ளது.  இதனால், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தீபாவளிக்கு பின் பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது.  பின்னர், மதவழிபாட்டு தலங்களும் திறப்பதற்கு அனுமதிக்கப்படும்.

கொரோனா பாதிப்புகள் மாசுபாடுகளால் அதிகரிக்க கூடும்.  அதனால், பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என நான் வேண்டி கேட்டு கொள்கிறேன். அதற்கு பதிலாக மண் விளக்குகளை நீங்கள் ஏற்றுங்கள்.

தீபாவளிக்கு பின்பு 15 நாட்கள் மிக கடுமையாக இருக்கும்.  நாம் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதனால், மீண்டும் ஊரடங்கு என்பதற்கான தேவை எழாது.

பொதுமக்களுக்கான பயணிகள் ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவது பற்றி மத்திய அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் முடிவு எட்டப்படும்.

முக கவசம் அணியாமல் கூட்டத்திற்குள் செல்லும் ஒரு கொரோனா நோயாளி, 400 பேருக்கு பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.  அந்த 400 பேர் இன்னும் நிறைய பேருக்கு தொற்று ஏற்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News