செய்திகள்
கோப்புப்படம்

பட்டாசு வெடிக்க தடை கோரும் மனுக்கள் - தேசிய பசுமை தீர்ப்பாயம் 9-ந் தேதி தீர்ப்பு

Published On 2020-11-05 19:28 GMT   |   Update On 2020-11-05 19:28 GMT
பட்டாசு வெடிக்க தடை கோரும் விவகாரம் தொடர்பான மனுக்கள் தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குகிறது.
புதுடெல்லி:

டெல்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 7 முதல் 30 வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து பதில் அளிக்க மத்திய அரசு, டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2-ந் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்புடைய மனுக்களை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு கடந்த புதன்கிழமை விசாரித்தது. அப்போது பிறப்பித்த உத்தரவில், பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்கள் தடைவிதித்துள்ளன.

காற்று மாசு அதிகமுள்ள நகரங்களை கொண்ட மாநிலங்களிலும், பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது.

எனவே, தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கண்ட மனுக்கள் மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று நடைபெற்றது.

இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் மூத்த வக்கீல் மகேஷ் ஜெத்மலானி, சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டே பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பசுமைப் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக தெரிவிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என வாதிட்டார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் வக்கீல் பாலேந்து சேகர், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் ராஜ்குமார் ஆகியோர், காற்று மாசு காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என வாதிட்டனர்.

டெல்லி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் நரேந்திரபால் சிங், அந்தமான் நிக்கோபர் சார்பில் வக்கீல் இந்திரா உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அமர்வு, பட்டாசு வெடிக்கத் தடை கோரும் விவகாரம் தொடர்பான மனுக்கள் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைவருக்கும் உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு, வரும் 9-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் தெரிவித்தது.
Tags:    

Similar News