செய்திகள்
கேசுபாய் பட்டேல்

குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார்

Published On 2020-10-29 08:26 GMT   |   Update On 2020-10-29 08:26 GMT
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
அகமதாபாத்:

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 93). பாஜகவின் மூத்த தலைவராக வலம் வந்த இவர், 2012ம் ஆண்டு கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் குஜராத் பரிவர்த்தன் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். 2012 தேர்தலில் அக்கட்சி தோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் 2014ல் கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.

ஏற்கனவே முதுமை சார்ந்த உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்டு, அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது.

இந்நிலையில் இன்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 

மருத்துவமனைக்கு வரும்போதே கேசுவாய் பட்டேல் உணர்வற்ற நிலையில் இருந்ததாகவும், தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை என்றும் மருத்துவனை நிர்வாகி டாக்டர் அக்சய் கிலேதர் தெரிவித்தார். பகல் 11.55 மணிக்கு கேசுபாய் பட்டேலின் உயிர் பிரிந்ததாகவும், அவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News