செய்திகள்
கோப்புப்படம்

குளிர்காலத்தை முன்னிட்டு ஒரு லட்சம் டன் மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி - டெண்டர் வெளியிடப்பட்டது

Published On 2020-10-14 22:06 GMT   |   Update On 2020-10-14 22:06 GMT
பண்டிகை காலம் மற்றும் குளிர்காலம் வருவதை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் மருத்துவ (திரவ) ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்று சமீப நாட்களாக குறைந்து வருகிறது. அதேநேரம் பண்டிகை காலம் மற்றும் குளிர்காலம் வருவதை முன்னிட்டு நாட்டில் தொற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். எனவே மருத்துவ ஆக்சிஜனின் தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் மருத்துவ (திரவ) ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல். லைப்கேர் நிறுவனம் சுகாதார அமைச்சகம் சார்பில் சர்வதேச டெண்டர் வெளியிட்டு உள்ளது. இந்த ஆக்சிஜன் இறக்குமதி மற்றும் மாநிலங்களுக்கு வினியோகிப்பதற்காக ரூ.600 முதல் ரூ.700 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஊரடங்குக்கு முன்பு வரை நாளொன்றுக்கு 6,400 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில் 1000 டன் மருத்துவத்துறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள ஆக்சிஜன் தொழில்துறை பயன்படுத்தி வந்தது. தற்போது தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கி இருப்பதால், சுமார் 7000 டன் உற்பத்தியாகிறது. இதில் 3,094 டன் ஆக்சிஜன் கொரோனா மற்றும் பிற நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

குளிர்காலத்தை முன்னிட்டு தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதால் கையிருப்பில் வைப்பதற்காக இந்த ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுகிறது.
Tags:    

Similar News