செய்திகள்
முதல் மந்திரி எடியூரப்பா

மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை

Published On 2020-10-11 23:15 GMT   |   Update On 2020-10-11 23:15 GMT
மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன், முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு:

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமியை ஒட்டி 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜம்புசவாரி ஊர்வலம் நடத்தப்படும். இதில் யானைகள் அணிவகுத்து செல்லும். அதைதொடர்ந்து அலங்கார ஊர்திகள், கலைக்குழுவினர், போலீஸ் குழுவினர், குதிரைபடைகள் இந்த ஊர்வலத்தில் இடம்பெறும்.

இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு, கலாசார நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்வார்கள். மைசூரு நகரமே 10 நாட்களுக்கு விழாக்கோலம் பூண்டிருக்கும்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை மிக எளிமையாக கொண்டாட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, மைசூரு தசரா தொடக்க விழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. கொரோனா போராளிகளை கவுரவப்படுத்தும் விதமாக இந்த விழாவை டாக்டர் மஞ்சுநாத் தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து மைசூரு அரண்மனையில் கலாசார நிகழ்ச்சிகள் நடத்த கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா மந்திரி மற்றும் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விதிமுறைகளை கட்டாயம் அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பவர்கள், முன்கூட்டியே கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். வைரஸ் தொற்று இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என முதல் மந்திரி அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News