செய்திகள்
பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா

’ஹத்ராஸ் இளம்பெண் குற்றம்சாட்டப்பட்ட நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்’ - 44 கிரிமினல் வழக்குகளை கொண்ட பாஜக தலைவர் பேச்சு

Published On 2020-10-08 01:23 GMT   |   Update On 2020-10-08 02:30 GMT
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளதாக 44 கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ம் தேதி புல் அறுக்க சென்ற 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்லால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 

பாலியல் கொடுமைக்கு உள்ளானதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண் செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உயிரிழக்க காரணமான குற்றத்திற்காக சந்தீப் சிங், ராமு சிங், ரவி சிங் மற்றும் லவ்குஷ் சிங் என்ற 4 உயர்வகுப்பை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்த வன்கொடுமை சம்பவத்தில் தற்போது ஜாதி, அரசியல் புகுந்தவண்ணம் உள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த தலைவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த உத்தரபிரதேச மாநிலம் பல்யா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், “அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி 
இருந்தாலும் இதுபோன்ற (பாலியல் வன்கொடுமை) குற்றச்செயல்களை தடுக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, கலாச்சாரத்தையும், சடங்குகளையும், நல்ல பண்புகளையும் 
சொல்லி கொடுத்து வளர்ப்பதன் மூலமாகவே பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியும்’ என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அவரை தொடர்ந்து தற்போது மற்றொமொரு பாஜக தலைவர் ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இவர் மீது 44 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீவட்ஸ்தவா கூறியதாவது:- 

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் தான் ஆண் நபரை (கற்பழிப்பு குற்றவாளிகளில் ஒருவன்) வயல்வெளிக்கு அழைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த இளம்பெண்ணும் ஆண் நபருக்கும் (குற்றவாளி) கள்ளத்தொடர்பு உறவு இருந்துள்ளது. 

இந்த செய்தி ஏற்கனவே சமூக வலைதளங்களிலும் செய்தி சேனல்களிலும் வெளியாகியுள்ளது. அதன் பின் தான் அந்த பெண் பிடிபட்டிருக்க வேண்டும்.

இது போன்ற பெண்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்படுகின்றனர். அவர்கள் கரும்பு தோட்டங்களிலும், சோளம், தினை வயல்களிலும், புதர்கள், பள்ளங்கள் அல்லது காடுகளில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்படுகின்றனர். அவர்கள் ஏன் நெல் அல்லது கோதுமை வயல்களில் உயிரிழந்து இறந்து கிடப்பதில்லை?

கரும்பு, சோளம், தினை போன்ற பயிர்கள் உயரமாக இருக்க்கும் அவற்றால் ஒரு நபரை மறைக்க முடியும். ஆனால் கோதுமை மற்றும் நெல் பயிர்கள் அல்லது நான்கு அடி உயரம் வரை மட்டுமே வளரும்.

குற்றம்சாட்டப்பட்ட ஆண் நபரில் ஒருவருடன் இளம்பெண் கள்ளத்தொடர்பில் இருந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்து அவர்களை அந்த இளம்பெண்ணை கொன்றிருக்கலாம். 

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது என்பதை உறுதிபடுத்த நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்கள் கடத்தி சென்றதற்கான நேரடி ஆதாரங்களும் இல்லை.

குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என நான் உறுதியாக கூறுகிறேன். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் தொடர்ச்சியாக அவர்கள் மன ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகிவிடுவார்கள். இழந்த இளைஞர்களை யார் திருப்பித் தருவார்கள்? அரசாங்கம் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமா?

இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை குற்றம்சாட்டப்பட்ட  4 நபர்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.  

என தெரிவித்தார்.
Tags:    

Similar News