செய்திகள்
நிதிஷ்குமார் - குப்தேஷ்வர் பாண்டே

பதவியை ராஜினாமா செய்து ஜேடியூ கட்சியில் சேர்ந்த பீகார் முன்னாள் டிஜிபி-க்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு

Published On 2020-10-07 22:44 GMT   |   Update On 2020-10-07 22:44 GMT
பீகார் டிஜிபி பதவியை ராஜினாமா செய்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த குப்தேஷ்வர் பாண்டேவிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பாட்னா:

பீகார் மாநிலத்தின் டிஜிபி-யாக செயல்பட்டு வந்தவர் குப்தேஷ்வர் பாண்டே. இவர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது.

அம்மாநிலத்தில் இம்மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தொகுதி பங்கீடுகள் குறித்து ஆளும் கட்சி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் உடன்பாடுகள் எட்டப்பட்டு தேர்தலிலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதிகளிலும், அதன் கூட்டணியான பாஜக 121 இடங்களிலும் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் தனக்குள்ள 122 தொகுதிகளில் இருந்து ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிக்கு 7 இடங்களை ஒதுக்கியுள்ளது. இதனால், பீகார் தேர்தலில் 115 தொகுதிகளில் மட்டுமே ஜேடியூ போட்டியிடுகிறது.

இதற்கிடையில், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பீகாரின் முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டேவிற்கு அம்மாநில சட்டமன்ற தேர்தலில் ஜேடியூ சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.    

இந்நிலையில், பீகார் தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 115 பேரின் பெயர்பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் நேற்று வெளியிட்டது. அதில் முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டேவின் பெயர் இடம்பெறவில்லை.  

தேர்தலில் போட்டியிட ஜேடியூ சார்பில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள குப்தேஷ்வர் பாண்டே,’ எனக்கு தொடர்ந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் நான் சற்று வருத்தமடைந்துள்ளனர். 

என்னை அழைக்கும் நபர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது புரிந்துகொள்ள முடிகிறது. டிஜிபி பதவியில் இருந்து ராஜினாமா செய்த 
பின்னர் பீகார் தேர்தலில் நான் போட்டியுடுவேன் என அனைவரும் நினைத்தனர். ஆனால், இந்த முறை நான் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் நான் வருத்தமும் அடையவில்லை. 

எனது வாழ்நாள் முழுவதும் நான் மக்களுக்காக உழைப்பேன். நான் பிறந்த ஊரான பக்சர் பகுதிக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கு தலைவணங்க்குகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.  

பக்சர் தொகுதியில் முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதி பாஜக வசம் சென்றுள்ளது. இதனால், குப்தேஷ்வர் போட்டியிட வாய்ப்பு வழக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News