செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Published On 2020-10-05 21:23 GMT   |   Update On 2020-10-05 21:23 GMT
2 ஊழல் வழக்குகள் தொடர்பாகம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். இவர் தனது பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வங்கி மோசடி உள்பட இவர் மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதை அந்த நாட்டின் தேசிய பொறுப்புடமை கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டார்.

போலி வங்கி கணக்குகளை உருவாக்கி ரூ.150 கோடி வரை மோசடி செய்த வழக்கில் ஆசிப் அலி சர்தாரி மீது கடந்த வாரம் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் பார்க் லேன் மற்றும் தட்டா நீர் வழங்கல் ஆகிய 2 ஊழல் வழக்குகள் இஸ்லாமாபாத் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்ததன. இதையொட்டி ஆசிப் அலி சர்தாரி கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையைத் தொடர்ந்து 2 ஊழல் வழக்குகள் தொடர்பாகவும் ஆசிப் அலி சர்தாரி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

ஆசிப் அலி சர்தாரியை தவிர்த்து பார்க் லேன் வழக்கில் 19 பேர் மீதும் தட்டா நீர் வழங்கல் வழக்கில் 15 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக இந்த 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்க கோரிய ஆசிப் அலி சர்தாரியின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Tags:    

Similar News