செய்திகள்
டெரிக் ஓ பிரையன்

ராகுலைத் தொடர்ந்து டெரிக் ஓ பிரையனையும் கீழே தள்ளிவிட்ட போலீஸ்... ஹத்ராஸ் எல்லையில் தொடரும் பதற்றம்

Published On 2020-10-02 08:03 GMT   |   Update On 2020-10-02 08:03 GMT
ஹத்ராஸ் மாவட்டத்திற்குள் நுழைய முடியாதபடி எல்லையை சீல் வைத்துள்ள போலீசார், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க வரும் தலைவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.
ஹத்ராஸ்:

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் இன இளம்பெண், டெல்லி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவரது உடல் போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டது. குடும்பத்தினர் அனுமதியின்றி, அவர்கள் யாரும் பங்கேற்காத நிலையில் போலீசார் அவசரமாக உடலை தகனம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் ஹத்ராஸ் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. உயிரிழந்த பெண்ணின் கிராமத்தை  நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கி வரும் அரசியல் தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். நேற்று ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை போலீசார் திருப்பி அனுப்பினர். ராகுல் காந்தியை பிடித்து கீழே தள்ளினர். இதுபோன்ற சம்பவங்களால்  மாவட்ட எல்லையில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்று காலை ஹத்ராஸ் நோக்கி சென்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற அவர்களை ஹத்ராஸ் மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். டெரிக் ஓ பிரையன் தடையை மீறி நடந்து சென்றபோது அவரை போலீசார் பிடித்து கீழே தள்ளி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் இந்த செயலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அக்கட்சியின் எம்பி ககோலி கோஷ் தாஸ்திடார் டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், அவரை (டெரிக் ஓ பிரையன்) தரையில் தள்ளிவிட்டதில் அவர் காயமடைந்திருக்கலாம் என்றும், அவர் தாக்கப்பட்டதாகவும் கூறி உள்ளார்.


Tags:    

Similar News