செய்திகள்
மத்திய இணை மந்திரி சுரேஷ் அங்கடியின் தாய் சோமவ்வா கண்ணீர்விட்டு கதறிய காட்சி.

மகனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாததால் மறைந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் தாய் கண்ணீர்

Published On 2020-09-25 01:50 GMT   |   Update On 2020-09-25 01:50 GMT
மகனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாததால், மறைந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் தாய் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
பெலகாவி :

பிரதமர் மோடியின் மத்திய மந்திரிசபையில், ரெயில்வே இணை மந்திரியாக பணியாற்றி வந்தவர் சுரேஷ் அங்கடி (வயது 65). கர்நாடக மாநிலம் பெலகாவி மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு எம்.பி.யாக சுரேஷ் அங்கடி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி சுரேஷ் அங்கடிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி நேற்று முன்தினம் இறந்தார். அவரது திடீர் மரணம் குடும்பத்தினரையும், ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சுரேஷ் அங்கடி மரணம் அடைந்த செய்தியை கேட்டதும் அவரது தாய் சோமவ்வா கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் சுரேஷ் அங்கடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வெறும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சுரேஷ் அங்கடியின் மகள் விமானம் மூலம் மும்பைக்கு சென்று அங்கிருந்து வேறொரு விமானத்தில் டெல்லிக்கு சென்றார்.

இதற்கிடையே சுரேஷ் அங்கடியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தானும் வருவதாக சோமவ்வா கூறினார். ஆனால் அவருக்கு வயதாகி விட்டதால் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தனது மகனின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று கூறி சோமவ்வா கண்ணீர்விட்டு கதறி அழுதார். மேலும் அவர் ஆழ்ந்த வருத்தத்திலும் உள்ளார். அவரை குடும்பத்தினர், உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News