செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் மின்னணு பண பரிமாற்றம் அதிகரிப்பு - ஆய்வில் தகவல்

Published On 2020-09-24 23:04 GMT   |   Update On 2020-09-24 23:04 GMT
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் மின்னணு பணபரிமாற்றம் அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.
புதுடெல்லி:

உலகில் கொரோனா பரவல் தீவிரமானதை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் பணத்துக்கு பதிலாக ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்துவது, மின்னணு பரிமாற்றம் ஆகியவை அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, கென்யா, சீனா, மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், தைவான், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 12 ஆயிரம் இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

* உலக அளவில் ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதாக தெரிவித்து உள்ளனர்.

* இந்தியாவில் 78 சதவீதம் பேர் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதற்கு ஆதரவான கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள். மின்னணு பணபரிமாற்றம் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் மனப்போக்கு கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் அதிகரித்து இருக்கிறது.

* பெரும்பாலானவர்கள் மளிகை பொருட்கள், மருத்துவ செலவு ஆகியவற்றுக்கே அதிகம் செலவிடுவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

* பொருட்களை வாங்குவதில் மிகவும் கவனமாக இருப்பதாகவும், உள்ளூர் கடைகளில் கிடைக்கும் பொருட்களையே வாங்க விரும்புவதாகவும் இந்தியாவில் 72 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

* இந்தியாவில், விடுமுறை, பயணச்செலவை குறைத்துவிட்டதாக 64 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

* மளிகை சாமான்கள் போன்ற பொருட்களை வாங்குவதற்கும், பயண கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது அதிகரித்து இருக்கிறது.

* 2025-ம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டில் முழு அளவில் மின்னணு முறையிலான பண பரிமாற்றம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் 87 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். (இது உலக அளவில் 64 சதவீதமாக உள்ளது).

* ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தில் செலவு அதிகரித்ததாக 56 சதவீத இந்தியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேற்கண்ட விவரங்கள் ஆய்வில் தெரியவந்து உள்ளன.
Tags:    

Similar News