செய்திகள்
மழை

கேரளாவில் கனமழை நீடிப்பு- 4 மாவட்டங்களில் நிலச்சரிவுக்கு வாய்ப்பு

Published On 2020-09-20 06:52 GMT   |   Update On 2020-09-20 06:52 GMT
கேரளாவில் மழை காரணமாக இடுக்கி, கண்ணூர், மலப்புரம், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் நிலச்சரிவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் மாநில பேரிடர் மீட்பு துறையினர் தயார் நிலையில் இருக்கும்படியும் எச்சரித்து உள்ளது.

இதுபோல கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

திருச்சூர், பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மழை காரணமாக இடுக்கி, கண்ணூர், மலப்புரம், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் நிலச்சரிவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மலையோர மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை போக்குவரத்தும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News