செய்திகள்
மானவ் பாரதி பல்கலைக்கழகம்

மானவ் பல்கலை. போலி பட்டம் ஊழல்- சிறப்பு விசாரணைக் குழு விசாரணை

Published On 2020-09-12 03:27 GMT   |   Update On 2020-09-12 03:27 GMT
இமாச்சல பிரதேச மாநிலம் மானவ் பாரதி பல்கலைக்கழக போலி பட்டம் ஊழல் தொடர்பாக 19 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உள்ளது.
தரம்சாலா:

இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்தைச் சேர்ந்த மானவ் பாரதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு போலியான பட்டம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய சோதனையில் பல்கலைக்கழகம் நீண்ட காலமாக போலி பட்டங்களை வழங்கி வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. மேலும் அச்சிடாத பட்டச் சான்றிதழ்கள், ஸ்டாம்புகள் இடமாற்றத்திற்கான வெற்றுப் பட்டங்கள், மதிப்பெண் அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் நேற்று சட்டசபையில் எதிரொலித்தது. போலி பட்டம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா? என காங்கிரஸ் எம்எல்ஏ ரஜீந்திர ராணா கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், இந்த வழக்கை சிஐடி பிரிவைச் சேர்ந்த 19 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் என அறிவித்தார். 

இந்த மோசடி தொடர்பாக விசாரிக்கும்படி அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை கேட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், சிஐடி பிரிவின் ஏடிஜிபி வேணுகோபால் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

மோசடி பற்றி தெரியவந்ததும் போலீசார் விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர். அவர்களில் 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 2 பேர்  சிறையில் உள்ளனர் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
Tags:    

Similar News