செய்திகள்
கிசான் ரெயில்

தென்னிந்தியாவிலிருந்து 332 டன் காய்கறி, பழங்களுடன் முதல் கிசான் ரெயில் டெல்லி சென்றடைந்தது

Published On 2020-09-11 02:54 GMT   |   Update On 2020-09-11 02:54 GMT
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளின் விளைபொருட்கள் விரைவாக சந்தைகளை சென்றடையும் வகையிலும் கிசான் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
புதுடெல்லி:

விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளின் விளைபொருட்கள் விரைவாக சந்தைகளை சென்றடையும் வகையிலும் கிசான் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 

அவ்வகையில் தென்னிந்தியாவில் ஆந்திராவின் அனந்தபூர் முதல் புதுடெல்லி வரை இந்திய ரெயில்வே கிசான் ரெயிலை இயக்கியுள்ளது. இந்த ரெயில் தென்னிந்தியாவின் முதல் கிசான் ரெயில் ஆகும். இந்த ரெயிலை புதன்கிழமை (செப்டம்பர் 9) மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே துறை இணை மந்திரி சுரேஷ் சி.அங்காடி மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

ஆந்திராவின் காய்கறிகள் மற்றும் மாதுளை, முலாம்பழம், பப்பாளி, கொய்யா, தக்காளி மற்றும் பிற பழங்கள் என மொத்தம் 332 டன் அளவிலான பொருட்களுடன் புறப்பட்ட இந்த ரெயில் இன்று காலை டெல்லி ஆதர்ஷ் நகர் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. 

விவசாயிகளுடன் வணிகர்களும் இந்த ரெயிலை இயக்குவதால் பயனடைகின்றனர். அவர்கள் தங்கள் பொருட்களை டெல்லியின் சந்தைகளுக்கு விரைவாக கொண்டு செல்ல முடிகிறது. அத்துடன், கிசான் ரெயில் வழியாக பொருட்களை அனுப்பும்போது இழப்பும் குறைவாக இருக்கிறது.
Tags:    

Similar News