செய்திகள்
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் (கோப்பு படம்)

பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பயங்கரவாதிகளுக்கு 7 ஆண்டு ஜெயில்

Published On 2020-09-09 10:41 GMT   |   Update On 2020-09-09 10:41 GMT
பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பயங்கரவாதிகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலம் பர்த்வானில் 2014ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வங்கதேச பயங்கரவாத இயக்கமான ஜமாத் உல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையில், குண்டு வெடித்த வீட்டை வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தியதும், பயங்கரவாத அமைப்பிற்கு இளைஞர்களைச் சேர்ப்பது மற்றும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு பயிற்சி அளித்ததும் தெரியவந்தது. அத்துடன்,  ஜமாத் உல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமான குழுக்கள் நாடு முழுவதும் பரவியிருப்பதாகவும் தெரியவந்தது. எனவே, விசாரணை மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தப்பட்டது. 

என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான வெடிபொருட்கள், வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் 33 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, 31 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வங்கதேச ஜமாத் உல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை என்ஐஏ தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 31 பேரில் ஆகஸ்ட் 2019ல் 19 பேருக்கும், நவம்பர் 2029ல் 5 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இப்போது 4 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 பேருக்கு எதிராகவும், தலைமறைவாக உள்ள 2 பேருக்கு எதிராகவும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என என்ஐஏ தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News