செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

ஆளுநராக இருந்தாலும், அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் - தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

Published On 2020-08-28 17:49 GMT   |   Update On 2020-08-28 17:49 GMT
ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என்று வசந்தகுமார் மறைவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து  சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையே, இன்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி , தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி , தி.மு.க. தலைவர் ஸ்டாலின்  உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும், வைகோ,  சரத்குமார், கமல்ஹாசன், திருமாவளவன், டிடிவி தினகரன்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் வசந்த குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த வசந்தகுமாருக்கு குலாம்நபி ஆசாத், குஷ்பு, அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட பலரும் , முக்கிய பிரமுகர்கள் , தொழிலதிபர்களும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

வசந்தகுமாரின் உடல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்பு சொந்த ஊரில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இந்நிலையில், ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என்று வசந்தகுமார் மறைவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

சித்தப்பா! நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது. என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம். அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது. ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம். இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர, இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு,

தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன். சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது. வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பல பேருக்கு பணி கொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது. 
கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும், கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது. ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News