செய்திகள்
பிரதமர் மோடி - ராகுல் காந்தி

மகாராஷ்டிர கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்

Published On 2020-08-25 06:33 GMT   |   Update On 2020-08-25 06:33 GMT
மகாராஷ்டிர கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் தலைநகர் மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 6.50 மணியளவில் கட்டிடத்தின் மேல் 3 மாடிகள் திடீரென இடிந்து விழ தொடங்கியது. சில நிமிடங்களில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்து உள்ளூர் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். பின்னர் மும்பையில் இருந்து விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர், நவீன எந்திரங்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுவரை அவர்கள் சுமார் 25 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 17 பேர் காயம் அடைந்தனர். மேலும் 70 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரோடு புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “என் எண்ணங்கள் தங்கள் அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் என்.டி.ஆர்.எப் குழுக்கள் சோகம் நடந்த இடத்தில் உள்ளன, இந்த விபத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அது வழங்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில், “மகாராஷ்டிர விபத்தால் நான் வேதனை அடைகிறேன். இறந்தவரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த மற்றும் சிக்கியுள்ள மக்களுக்கு விரைவில் உதவி வழங்குமாறு மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினரும் கைகோர்த்துள்ளார்கள்” என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் இந்த துயர விபத்து ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் விபத்தில் சிக்கிய கட்டிடம் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் மட்டுமே ஆனதாக கூறப்படுகிறது. மேலும் கட்டிடம் இடிந்து விழுந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News